பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் ஆகும் கனவோடு சினிமாவிற்கு நுழைந்த தம்பி ராமையா, உதவி இயக்குநராக களம் இறங்கினார். பின்னர் மனுநீதி என்ற படம் மூலம் இயக்குநராக அவதரித்தார். ஆனால் அந்தப்படம் சரியாக ஓடவில்லை. இதனையடுத்து காமெடி மற்றும் குணச்சித்திர வேடம் ஏற்று நடித்து வந்த தம்பி ராமையா நீண்ட இடைவேளைக்கு பின்னர் வடிவேலுவை வைத்து மீண்டும் இயக்குநராக களம் இறங்கினார். இந்திரலோகத்தில் நா.அழகப்பன் என்ற பெயரில், வடிவேலு மூன்று வித்தியாசமான வேடம் ஏற்று நடித்த அந்தப்படமும் சரியாக ஓடாத காரணத்தால் மீண்டும் நடிப்பிலேயே கவனம் செலுத்தினார். மைனா படம் அவருக்கு ஒரு பெரிய வெற்றி படமாக அமைய, அதற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. தொடர்ந்து ஒஸ்தி, வாகைசூட வா, வேட்டை, கழுகு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதுதவிர டஜன் கணக்கில் கைவசம் படங்கள் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் தம்பி ராமையா மீண்டும் படம் இயக்க உள்ளார். இப்படத்திற்கு "இரண்டு பாயும் புலியும் ஒரு பச்சைக்கிளியும்" என்று பெயர் வைத்து இருப்பதாகவும், இதில் ஹீரோவாக பிரகாஷ்ராஜூம், அவருடன் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மெர்ச்சி சிவாவும், கூடவே படத்தை இயக்குவதுடன் தம்பி ராமையாவும் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் ஹீரோயினாக புதுமுகம் ஒருவர் நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment